search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல் தம்பதி"

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் டிரைவருடன் தகராறில் ஈடுபட்ட வக்கீல் தம்பதியை சஸ்பெண்டு செய்து பார்கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    சென்னையை சேர்ந்த வக்கீல் எஸ். சாகுல் ஹமீது, இவரது மனைவி ஷிகா சமர்தான். இவரும் வக்கீல் ஆக பணிபுரிகிறார்கள்.

    கடந்த மாதம் (ஜூலை) 30-ந்தேதி இவர்கள் இருவரும் சென்னை அண்ணாநகரில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஐகோர்ட்டு நீதிபதியின் கார் இவர்களது காரை முந்திச் சென்றது.

    அதை தொடர்ந்து விரட்டிச் சென்ற வக்கீல் சாகுல் ஹமீது தனது காரை நீதிபதியின் கார் முன்பு மறித்து நிறுத்தினார். பின்னர் அவரது கார் டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தனர்.

    அப்போது காரில் நீதிபதி இருந்தார். அங்கு அவர் இருப்பது தெரிந்தும் அவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வக்கீல் தம்பதியின் இந்த நடவடிக்கையை ரோட்டில் கூடியிருந்த பொதுமக்களும் மற்ற வாகன ஓட்டிகளும் வேடிக்கை பார்த்தனர்.

    அத்துடன் விடாமல் சம்பவம் நடந்த 3 நாள் கழித்து நீதிபதியின் வீட்டுக்கு சென்று கார் டிரைவருடன் அவர்கள் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். அந்த நேரம் கோர்ட்டுக்கு செல்ல நீதிபதி தயாராகி கொண்டிருந்தார்.

    இச்சம்பவங்கள் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கத்தில் நீதிபதியின் பெர்சனல் பாதுகாப்பு அதிகாரி புகார் செய்தார். இதுகுறித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், சீனியர் கவுன்சில் ஆர். சிங்கார வேலன் மற்றும் வக்கீல் சந்திரசேகரன் தலைமையிலான சிறப்பு கமிட்டி விசாரணை நடத்தியது.

    முடிவில் வக்கீல் தம்பதி ஷாகுல்ஹமீது, ஷிகா சமர்தான் ஆகியோரை 15 நாள் சஸ்பெண்டு (தற்காலிக பணி நீக்கம்) செய்து உத்தரவிட்டனர். இக்கால கட்டத்தில் இவர்கள் நாட்டில் உள்ள எந்த கோர்ட்டிலும் நடுவர் மன்றங்களிலும் பணிபுரிய முடியாது.

    சிறப்பு கமிட்டியின் சஸ்பெண்டு நடவடிக்கை உத்தரவு நகல் வக்கீல் சங்க செயலாளர் எஸ்.ராஜ்குமார் மூலம் சாகுல் ஹமீது, ஷிகா சமர்தான் தம்பதிக்கு வழங்கப்பட்டது.

    அதில் வக்கீல் தம்பதியரின் இத்தகைய நடவடிக்கை மதிப்புமிக்க நீதிபதிகள் மற்றும் நீதித்துறையின் மீதான ஒட்டு மொத்த மதிப்பையும், நம்பிக்கையையும் பாழ்படுத்தியுள்ளது. எனவே அவர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும் நீதிபதி கார் டிரைவருடன் ஏற்பட்ட தகராறு குறித்த புகாருக்கு சிறப்பு கமிட்டியில் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பதில் அளிக்க தவறினால் இந்த விவகாரம் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப்படும்.
    ×